அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எங்களுடையவர் என கொண்டாடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
வேடிக்கையாகப் பார்க்கிறேன்.. வினோதமாக பார்க்கிறேன்..
இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா, தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே ஒரு நாள் டொனால்ட் ஹாரிஸ் என்பவரை சந்தித்து, பின்னர் மனமுடித்து கமலாவை பெற்றிருக்கிறார்.
பின்நாட்களில்,கமலா ஹாரிஸ், சட்டம் படித்து அங்கு பணியாற்றிய, டக்லஸ் எமாஃப் என்பவரை 2014' திருமணம் முடித்தார்.
கமலா ஹாரிஸ் இந்து மத பின்னணியை சேர்ந்தவர். அவரது கணவர் யூதர்.
எப்போதுமே நம்ம ஆட்கள், ஒருவர் பேர் புகழ் பெற்றிருந்தால், அவருடைய பூர்வோத்திரம் குறித்துக் கேள்விப்பட்டு 'அவர் நம்ம ஊரை சேர்ந்தவர்' என்று கொஞ்சம் கேள்விப்பட்டாலே போதும். 'எங்க ஊரு ஆள், எங்க ஊர் ஆள்' என்று சொல்லிக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
அவருடைய தாய் அங்கு போய் கஷ்டப்பட்டு படித்து, திருமணம் முடித்து, மகளை பெரியவளாக்கி, அவரும் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பதவியை அடைந்திருக்கிறார்கள்.
ஆனால் நம்ம ஆட்களோ, சுலபமாக இதை இங்கு கொண்டாடி, அதற்கு உரிமை பாராட்ட விரும்புகிறார்கள்.
அப்படி பார்க்கப் போவோமானால், *இஸ்ரேல் தேசம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி எங்க வீட்டு மருமகள் *என்றல்லவா சொல்லி உரிமை பாராட்ட வேண்டும்.
ஆனால், அவர்கள் அப்படி உரிமை பாராட்டினர்களா என்று தெரியவில்லை.
நம்மவர்களோ, சிவகாசி பட்டாசு வெடித்து குதூகலித்து, கொண்டாடுகிறார்கள்..
அப்படி கொண்டாடுகிற அவர்களின் ஊரில், 'திறமையுள்ள பிள்ளைகள்' பலர் இருப்பார்கள். அவர்களை கைதூக்கி விட்டு பெரியவர்களாக்கி, அதன் பின்னர் அவர்களை சுட்டிக் காட்டி, *எங்க ஊர் பிள்ளைகள்'* என்று சொல்லி கொண்டாடுவார்களானால் 100% அப்படியே அதை வரவேற்று ஏற்றுக் கொள்ளலாம்.
(இந்த பதில் போதும் என்று நினைக்கிறேன்.)