முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்கள் புது முயற்சி !
ஊதிய உயர்வுடன் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணை மனு தினமும் அனுப்பி கவன ஈர்ப்பு செய்து வருகின்றனர்.
இதன் நகலை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு அனுப்பி கவன ஈர்ப்பு செய்து கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மனு நீதி நாளில் நேரிலும் கருணை மனுவை கொடுத்து கவன ஈர்ப்பு செய்து வருகின்றார்கள்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 26.08.2011ல் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி எண்.110-ன்கீழ் அறிவிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசாணை 177 நாள் 11.11.2011 மூலம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-2012 கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டனர்.
உடற்கல்வி, ஓவியம், மற்றும் தொழிற்கல்வி (கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி) ஆகிய கல்விஇணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
10வது கல்வியாண்டு நடக்கிறது. ஊதியஉயர்வு ரூ.2ஆயிரம் 3வது கல்வியாண்டில், பின்னர் 6வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இந்த ரூ.7700/- தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
16549 பேரில் மரணம், பணிஓய்வு என 4ஆயிரத்திற்கும் மேலான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த கல்வி (SAMAGRA SHIKSHA) என செயல்பட்டு வருகிறது.
இதனால் பள்ளிகளும் ஒருங்கிணைப்பட்டு ஒரே அலகின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பணிநியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளிலோ அல்லது அரசாணை 186ன்படி 2 பள்ளிகளிலோ பணிஒதுக்கி சம்பளத்தை ரூ.15ஆயிராமாக, ரூ.23ஆயிரமாக, ரூ.30ஆயிரமாக அதிகரித்து இருக்கலாம். ஆனாலும் செயல்படுத்தவில்லை.
கடந்த 9 வருடமாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் சுமார் ரூ.60ஆயிரம் இழந்து தவிக்கின்றனர்.
போனஸ், 7வது ஊதியக்குழு 30% ஊதியஉயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, விபத்து காப்பீடு இதுவரை வழங்கவில்லை.
இந்த நிலையிலும் அரசின் உத்தரவை ஏற்று, வேலைநிறுத்த காலங்களில், பள்ளிகளை திறந்து நடத்துகிறோம்.
ஜாக்டோஜியோ போராட்ட காலங்களில் பள்ளிகளை நடத்தும் அனுபவம் மற்றும் அரசுப்பணிக்குரிய கல்வித்தகுதியோடு 10 கல்வியாண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.
பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
16508 துப்புரவு பணியாளர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையில் ரூ.7500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த சிறப்பு இளைஞர்படையினர் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் கணினி ஆசிரியர்கள் மற்றும் 5000 துப்புரவாளர்கள் இரவுக்காவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய்துறையில் பகுதிநேரப்பணியாளர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்று பல முன்உதராணங்கள் உள்ளது.
எனவே,12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் கருணையுடன், தமிழகஅரசு செய்ய வேண்டுகிறோம்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 2017-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்ததை அமுல்செய்ய வேண்டுகிறோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் வரும் ஜனவரி சட்டசபை கூட்டத்தொடரில், இடைக்கால பட்ஜெட்டில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே கருணை மனுக்களை அனுப்பி வருகின்றோம்.
ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதை கருணையுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.
தேர்தலுக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களை தமிழகஅரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் கேட்டு கொள்கிறோம் என்றார்.