மாடித் தோட்டம்!
இயற்கையான பொருட்களை உண்டு நோயில்லாமல் நீண்ட நாட்கள் வாழ்ந்த நம் முன்னோர்களைப் போல வாழ முடியாமல், நம்மிடையே இன்று பெருகி வரும் நோய்களுக்கு காரணம் ரசாயன உரம் போட்டு வளர்க்கப்படும் உணவு!
பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது இயற்கை விவசாயம் நம்மை விட்டு சென்றுவிட்டது. ஆனாலும் இப்போது ஒரு சிலர் இயற்கை விவசாயம் முயற்சி செய்வது ஆறுதல் அளிக்கிறது. எனினும் அது அனைவருக்கும் தேவையான உற்பத்தி நிலையை அடையவில்லை.
இந்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நமக்கு தேவையான காய்கறிகளை மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக உற்பத்தி செய்து கொள்வது சிறிது நன்மை பயக்கும்.
பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும், போதிய இடமில்லை என்று ஒதுங்கி விடுகின்றனர். தோட்டம் அமைக்க காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என ஏராளமான இடமும், வழியும் உள்ளது.
பிளாஸ்டிக் பைகள், வாளிகள், மண் தொட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பினை விரித்து அதன்மீது வைக்கலாம்.
செடிகள் வளர்ப்பில் ஆர்வமும், போதிய பயிற்சியும் இருந்தால் நமக்கு தேவையான இயற்கை பொருட்களை உற்பத்தி செய்யலாம். பழைய கேன்கள், பாட்டில்கள் மற்றும் டப்பாக்களை செடி வளர்ப்பிற்கு உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.
2 தலைமுறை வரை நகரங்களிலும் பெரும்பான்மை வீடுகளில் தோட்டம் காணலாம். இல்லையென்றால், பூ தொட்டிகளாவது இருக்கும். ஆனால், இன்றைய குழந்தைகள் இயற்கையுடன் தொடர்பே இல்லாமல் வளர்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தவரை வீட்டு தோட்டங்களில் காய்கறி, கீரைகள், மூலிகைகள் வளர்த்தால் குடும்பத்தின் உணவு தேவைகளை சாமாளிக்கலாம்.
இயற்கையின் தொடர்பும் விட்டுபோகாமல் பாதுகாக்க முடியும்!