அதில் என்ன தவறு இருக்கிறது? எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய கட்டுரையில்

எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியது என்ன? அதில் என்ன தவறு இருக்கிறது?


- கேட்கிறார் அறிஞர் ரவிக்குமார் 


 


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள அருந்ததிராயின் நூல் முதலில் 2010 ஆம் ஆண்டில் அவுட்லுக் பத்திரிகையில் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அப்போது அதன் ஒரு பகுதியை மொழிபெயர்த்து உயிர்மை இதழில் நான் எழுதிக்கொண்டிருந்த பத்தியில் ( ஜூலை 2010) தந்திருந்தேன். அதை இங்கே தருகிறேன்: 


 


=====


 


சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் மாவட்டங்களில் ஒன்றான தண்டேவாடாவின் வனப்பகுதிகளுக்குச் சென்று அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அவுட்லுக் வார இதழில் (மார்ச் 29, 2010) வெளியானது. அதற்கு முன்பும் பலமுறை அவர் மாவோயிஸ்டுகளைப்பற்றி எழுதியிருக்கிறார் என்றாலும் காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளுடன் தங்கித் தனது அனுபவங்களை நீண்ட கட்டுரையாக( இருபதாயிரம் வார்த்தைகள்!) அவர் எழுதியதற்குப் பிறகு அவர்மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்துவிட்டன. அவர் ஒரு மனித உரிமை ஆர்வலராக மட்டும் இருந்திருந்தால் பினாயக் சென்னைப்போல அவரையும் எப்போதோ சிறையில் அடைத்திருப்பார்கள். அவரது புகழ்தான் இப்போது அவருக்குக் கவசமாக இருக்கிறது.(ஆனால் அந்தக் கவசத்தை உடைக்கும் வழி ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.) அருந்ததியின் புகழ்பெற்ற அவுட்லுக் கட்டுரையின் ஆரம்பப் பகுதியை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன்: 


      


 


    ‘‘எனது வீட்டுக் கதவுக்குக் கீழ் இருக்கும் இடைவெளி வழியே போடப்பட்டிருந்த சீலிடப்பட்ட உறைக்குள் இருந்த டைப் செய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம் இந்தியாவின் மிகப் பயங்கரமான உள்நாட்டு அபாயம் என்று வர்ணிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்கான தருணத்தை உறுதி செய்திருந்தது. இந்தச் செய்திக்காக பல மாதங்களாக நான் காத்திருந்தேன். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த தண்டேவாடாவில் இருக்கும் தண்டேஸ்வரி கோவிலுக்குக் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் குறிப்பிட்ட நான்கு நேரங்களுக்குள் நான் சென்று சேர வேண்டும். எனது துரதிர்ஷ்டம், போக்குவரத்து வேலை நிறுத்தம், சாலை மறியல், கார் டயர் பஞ்சர் மற்றும் மோசமான வானிலை& என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் நான்கு நேரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ‘‘எழுத்தாளர் தன்னுடன் கேமரா ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அடையாளத்துக்காக நெற்றியில் திலகமிட்டிருக்க வேண்டும். கையில் தேங்காய் ஒன்றை வைத்திருக்க வேண்டும். அவரைச் சந்திக்க வருபவர் தலையில் தொப்பி அணிந்திருப்பார். கையில் அவுட்லுக் பத்திரிகையின் ஹிந்திப் பதிப்பு ஒன்றையும், வாழைப்பழங்களையும் வைத்திருப்பார். நமஸ்கார் குருஜி என்பதுதான் பாஸ்வேர்ட்’’ என அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. நமஸ்கார் குருஜியா? வருவது ஒரு ஆண் என்று நினைத்திருக்கிறார்களா? நான் என்ன மீசை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.


    தண்டேவாடாவைப் பல விதங்களில் விவரிக்கலாம். அதுவொரு நகை முரண். இந்தியாவின் இதயம் என்று சொல்லக்கூடிய பகுதியில் அமைந்திருக்கும் எல்லைப்புற நகரம். நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தின் பூகம்ப மையம். தலைகீழாக்கப்பட்ட, உட்பக்கம் வெளிப்பக்கமாக மாற்றப்பட்ட நகரம். தண்டேவாடாவில் போலீஸ்காரர்கள் சாதாரண உடை அணிந்திருப்பார்கள். போராளிகளோ சீருடை அணிந்திருப்பார்கள். சிறை கண்காணிப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். கைதிகளோ சுதந்திரமாக இருப்பார்கள். (இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுமார் முன்னூறு கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள்.) கற்பழிக்கப்பட்ட பெண்களோ போலீஸ் லாக்கப்பில் பூட்டப்பட்டிருப்பார்கள். அவர்களைக் கற்பழித்தவர்களோ கடைத்தெருவில் மேடை போட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள்.


    இந்திராவதி ஆற்றுக்கப்பால் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதி ஒன்றை போலீஸ்காரர்கள் ‘பாகிஸ்தான்’ என்று அழைக்கிறார்கள். அங்குள்ள கிராமங்கள் காலியாக கிடக்கின்றன. காடுகளில் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். பள்ளிக்குப் போகவேண்டிய குழந்தைகள் காடுகளில் ஓடித் திரிகிறார்கள். அழகான அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகள் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு இடிபாடுகளாகக் கிடக்கின்றன. அல்லது போலீஸ்காரர்களின் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வனப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரமான யுத்தத்தைப் பற்றி இந்திய அரசுக்குப் பெருமையும் இருக்கிறது. அவமானமும் இருக்கிறது. ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்பது அறிவிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சரும், அந்த யுத்தத்தின் சி.இ.ஓ.வுமான ப.சிதம்பரம் அப்படியொரு போர் நடக்கவேயில்லை என்றும், எல்லாமே ஊடகங்கள் உற்பத்தி செய்த கதைகள்தான் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருந்தபோதிலும் கணிசமான தொகை அதற்காக ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தம் நடக்குமிடம் இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள காடுகளில்தான் என்றபோதிலும், அதன் தாக்கம் நம் எல்லோருக்குமே இருக்கும்.


    பேய்கள் என்பவை இறந்து போன யாரோ சிலரின் ஆவிகள் என்றால் காட்டின் உள்ளே போகும் நான்கு வழிச் சாலையை அதற்கு எதிர்ப்பதமாக குறிப்பிடலாம். வரப்போகும் ஒன்றின் ஆவிதான் அது. காட்டுக்கு உள்ளே எதிர் எதிராக அணிவகுத்திருக்கும் இருதரப்பினரும் எல்லாவிதங்களிலும் சமமற்றவர்களாக உள்ளனர். ஒருபுறம் ஏராளமான பணத்தோடும், ஆயுதங்களோடும், ஊடக ஆதரவோடும் இருக்கின்ற துணை ராணுவ படைகள். மறுபுறம் மரபான ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் ஆனால் அசாதாரணமான வன்முறை வரலாற்றைக் கொண்ட மாவோயிஸ்ட் கொரில்லாக்களால் உணர்வூட்டப்பட்ட சாதாரண கிராமவாசிகள். துணை ராணுவப்படையினரும், மாவோயிஸ்டுகளும் நீண்ட காலமாகவே எதிர் எதிராக நின்று மோதிக்கொண்டவர்கள். ஐம்பதுகளில் தெலுங்கானாவிலும், அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுகளிலும் மேற்கு வங்கம், பீகார், ஆந்திராவிலுள்ள ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களிலும் இத்தகைய மோதல்கள் நடந்ததுண்டு. மீண்டும் ஆந்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எண்பதுகள் தொடங்கி இன்றுவரை இந்த மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களில் ஒருவருடைய யுக்தி மற்றவருக்குத் தெரியும். அதுபோலவே ஒருவருடைய போர்த்திட்டமும் மற்றவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு முறையும் மாவோயிஸ்டுகள் அழித்தொழிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் மிகவும் உறுதியோடும், ஒழுங்கமைப்போடும் அவர்கள் எழுந்து கொண்டே இருக்கிறார்கள். இன்று கார்பரேட் உலகத்தின் கனவு பூமியும், லட்சக்கணக்கான ஆதிவாசிகளின் தாய் நிலமுமான கனிம வளம் கொண்ட சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த காடுகளினூடே மாவோயிஸ்டுகளின் கலகம் பரவியிருக்கிறது.


    தேர்தல் என்பது ஒரு ஏமாற்று, பாராளுமன்றம் என்பது ஒரு பன்றித் தொழுவம் என்று கூறுகிற, இந்திய அரசை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தூக்கி எறிவோம் என்று அறிவித்திருக்கிற மாவோயிஸ்டுகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் என்றே இந்த மோதலைத் தாராளவாத சிந்தனை கொண்டவர்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள். அது எளிதும்கூட. சீனாவில் புரட்சியை வெற்றி பெறச்செய்த மாஓவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கலக வரலாறு கொண்டவர்கள்தான் அந்தப் பகுதிகளில் வாழும் ஆதிவாசி மக்கள் என்பதை மறந்து விடுவது நமக்கெல்லாம் எளிது. ஹோ, ஒரோன், கோல், சந்தால், முண்டா, கோண்டு ஆகிய ஆதிவாசி இனங்களைச் சேர்ந்தவர்கள் ஜமீன்தார்களுக்கு எதிராகவும், வட்டிக்காரர்களுக்கு எதிராகவும், பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகவும் பலமுறை கலகம் செய்துள்ளனர். அந்தக் கலகங்களெல்லாம் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட போதிலும், ஆதிவாசி மக்களை இன்றுவரை எவராலும் வெல்ல முடிந்ததில்லை. இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த ஆயுதப் போராட்டத்தின் மையமாகவும், ஆதிவாசி மக்கள் இருந்தார்கள். அதிலிருந்தே நக்சல்பாரி அரசியல் என்பது ஆதிவாசி அரசியலோடு பின்னிப்பிணைந்தே இருக்கிறது. அந்தக் கலகங்கள் நக்சலைட்டுகளைப் பற்றி கூறுவதைப்போலவே ஆதிவாசிகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.


    இந்தக் கலகப் பாரம்பரியம் கோபம்கொண்ட, இந்திய அரசால் வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி மக்களை விட்டுச்சென்றிருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்குத் தார்மீக நியாயத்தை வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது. அந்த நாள் ஆதிவாசி மக்களின் வாழ்வில் ஒரு துயர நாளாகும். இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனியவாதிகளின் அணுகுமுறையை நியாயப்படுத்துவதுபோல் ஆதிவாசிகளின் தாய்நிலத்தை அரசாங்கத்தின் பொறுப்பில் அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்தது. ஒரே இரவில் ஆதிவாசி மக்கள் அனைவரையும் தங்களது தாய்நிலத்திலேயே பிச்சைக்காரர்களாக அது மாற்றிவிட்டது. வனத்தில் விளையும் பொருட்கள் மீதான அவர்களுடைய பாரம்பரிய உரிமையை அது பறித்துக்கொண்டு விட்டது. அவர்களுடைய வாழ்க்கையை அது குற்றமயமானதாக ஆக்கிவிட்டது. ஓட்டுப்போடும் உரிமையைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக ஆதிவாசி மக்களின் கௌரவத்தையும், உயிர் வாழும் உரிமையையும் அது பறித்துக் கொண்டுவிட்டது. 


    இந்திய அரசு ஆதிவாசி மக்களை ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை வாழ்க்கையின் பாதாளத்துக்குத் தள்ளிவிட்டு அவர்களுடைய வறுமையையே அவர்களுக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. அணைகள் கட்டவும், பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தவும், சுரங்கங்களைத் தோண்டவும் ஒவ்வொரு முறையும் ஆதிவாசி மக்களை இடம் பெயர்க்க வேண்டியது அரசாங்கத்துக்கு அவசியமாகி விட்டது. ‘ஆதிவாசிகளை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருகிறோம்’, ‘நவீன வளர்ச்சியின் கனிகளை ஆதிவாசிகளுக்குத் தருகிறோம்’ என்றெல்லாம் அரசு பேசிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் இடம் பெயர்ந்து அகதிகளாகியுள்ள லட்சக்கணக்கான மக்களில் & பெரிய அணைகளால் மட்டும் சுமார் மூன்று கோடி ஆதிவாசிகள் இடம் பெயர்ந்துள்ளனர் & பெரும்பாலோர் ஆதிவாசிகள் ஆவார்கள். ஆதிவாசிகளுக்கு நன்மை செய்யப்போகிறேன் என்று அரசாங்கம் பேச ஆரம்பித்தால் அவர்களுக்கு ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.


    அரசாங்கத் தரப்பிலிருந்து இப்படி அண்மையில் கவலைப்பட்டிருப்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆவார். ஆதிவாசி மக்கள் அருங்காட்சியகப் பண்பாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். மிகப்பெரிய சுரங்க நிறுவனங்களின் வழக்கறிஞராக இருந்தபோது சிதம்பரத்துக்கு இப்படியான சிந்தனை தோன்றவில்லை. ஏன் இப்போது அவருக்கு இத்தகைய கவலை ஏற்பட்டிருக்கிறது? அதன் அடிப்படை என்ன? என்று பார்க்க வேண்டியது அவசியம்.


    கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் கார்பரேட் நிறுவனங்களோடு பல கோடி டாலர்கள் மதிப்பு வாய்ந்த நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. ரகசியமாக செய்யப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் இரும்புத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், எஃகு ஆலைகளைக் கட்டுவதற்கும், மின் உற்பத்தி நிலையங்களை, அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகளை, பெரிய அணைகளை, சுரங்கங்களை உருவாக்குவதற்குமானவை. இந்த ஒப்பந்தங்களெல்லாம் பணமாக மாறவேண்டுமென்றால், அந்தப் பகுதிகளிலிருக்கும் ஆதிவாசி மக்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த யுத்தம்.’’ 


அவுட்லுக்கில் வெளியான அந்தக் கட்டுரையில் இது ஒரு சிறிய பகுதிதான்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்