மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது கடுமையான நடவடிக்கை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை. கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய 4 விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது, இது ஒரு தொற்று நோய். அது சாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோரும் விழிப்புடன் இருந்து, அரசின் அறிவுரைகளைக் கேட்டால் தான், நாம் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியும். மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையென்றால், மூன்றாம் நிலையான ஒரு அபாய நிலைக்குச் சென்று விடுவோம். மருத்துவ மாநிலமாக தமிழகமும், மருத்துவத் தலைநகராக சென்னையும் விளங்குகிறது. தலைசிறந்த மருத்துவம் இங்கு வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.