வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை. வனத்துறையினர் தகவல்.
வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் வனவர் அசோக்குமார் ஆகியோர் கூறியதாவது:- பயிர்கள் நாசம். நெல்லை வன உயிரின சரணாலயம், புளியங்குடி வணக்கத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு காடுகளில் யானை, காட்டு மாடு, மிளா, மான் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வன உயிரினங்கள் கோடைகாலங்களில் வனப்பகுதிக்குள் ஏற்படும் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. அதனைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு சூரிய ஒளியில் இயங்கும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு பட்டா நிலங்களுக்குள் வருவதை தடுக்கும் வகையில் யானை தடுப்பு அகழிகள் புளியங்குடி பீட், டி.என்.புதுக்குடி பீட் ஆகிய இடங்களில் சீர்செய்யப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளி வருவதை தடுப்பதற்கு மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிக ஒளி வீசக்கூடிய விளக்குகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய சை ரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு. இரவு நேரங்களில் யானை, காட்டு மாடுகள் வனப்பகுதியை விட்டு நிலங்களுக்குள் வரும் வழியில் வனத் துறை பணியாளர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக ஒளி வீசக்கூடிய டார்ச்லைட்டுகளை பயன்படுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், டமாரம் அடித்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வனச்சரக அலுவலகத்தை அணுகினால் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து நஷ்ட ஈடு பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.