சாத்தூர் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம். இன்ஸ்பெக்டர்,பெண் போலீஸ் உட்பட மூவர் மீது வழக்கு.
சாத்துார் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்ததாக இன்ஸ்பெக்டர், பெண் தலைமை காவலர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வெம்பக்கோட்டை அருகே கீழாண்மறைநாட்டை சேர்ந்தவர் மாரிச்சாமி .ராணுவ வீரர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சாத்துார் - வெம்பக்கோட்டை ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில் வாகன சோதனை செய்தார். டூவீலரில் வந்த மாரிச்சாமி மீது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மது போதையில் இருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
இவ்வழக்கு சாத்துார் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதி மன்றத்தில் ஆஜரான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி ரசீதில் கையெழுத்திட்டுள்ளார்.
அபராதம் கட்டிய ரசீது கையெழுத்துக்கும், இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த செலானில் உள்ள கையெழுத்துக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.
இதை கண்ட நீதிபதி அபராதம் கட்டிய நபரை அழைத்து விசாரித்தார்.
அப்போது அவர் கங்கர் செவல் சரவணன் 20, என்பதும், தனது பெரியப்பா மகன் மாரிச்சாமிக்காக ஆள் மாறாட்டம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியதாகவும், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், பெண் காவலர் கணபதி கூறியதன்படி ஆஜரானதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி அறிவுறுத்தலின்படி இளநிலை உதவியாளர் பிரகாஷ் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது போலீசில் புகார் செய்தார்.
சாத்துார் டவுன் போலீசார் ஆள்மாறாட்டம் செய்த சரவணன், இன்ஸ்பெக்டர், பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.