கொரோனா வைரஸ் தொற்று நோய் அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அளவு குறையத் தொடங்கிவிட்டது
சென்னை என்பது வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம் என்ற நிலைமை தற்போது மாறியுள்ளது. கொரோனாவால் நிலைமை தலைகீழாக மாறி போய் உள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலர் கொரோனா பற்றி எந்தவித அச்சமும் இல்லாமல் சுற்றுவதையும் காண முடிகிறது. அவர்களை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பஸ்களில் குறைவான பயணிகளுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் இருக்கைகளில் அமரும் வகையில் தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவுரை மாநகர பேருந்தில் கொஞ்சம் கூட கடைபிடிக்கப்படுவதில்ைல. வழக்கமான நேரத்தில் இருப்பது போன்று மக்கள் முண்டியடித்து கொண்டும், நெரிசலில் சிக்கியும் பஸ்களில் செல்வதை காணமுடிகிறது. அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், மக்கள் வேறு வழியின்றி பஸ்சில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏறும் நிலைதான் உள்ளது. எனவே, கூட்டம் நெரிசல் நிறைந்த நேரத்தில் அதிக அளவு பஸ்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை தொடர்ந்து வலுக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான பஸ்களை இயக்காத வகையில் கொரோனாவின் பாதிப்பு எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு பயத்தால் சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் கூட சென்னைக்கு மீண்டும் வர வேண்டுமா என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை வரை சொந்த ஊரில் இருக்கலாம் என்று பலர் நினைத்து அங்கேயே தங்க தொடங்கியுள்ளனர். அதனால்தான் சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில்களில் வரும் கூட்டம் வழகத்தை விட குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது. தென்மாவட்ட ரயில்களில் எப்போது பார்த்தாலும் டிக்கெட் இல்லாத நிலை இருந்து வருவது வழக்கம். ஆனால், இப்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் பக்கத்து மாவட்டத்துக்கு வரும் ரயில்களில் டிக்கெட் அனைத்தும் காலியாக இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் இன்னும் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவை விரட்டி விடலாம் என்றும் ஒவ்வொரு விதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அரசு எச்சரிக்க தொடங்கியுள்ளது.