தண்ணீர் தரும் அதிசய மரம்..!!
தற்போது நிலவும் வறட்சி, வெப்பம், அனல் காற்று, மழையின்மை போன்றவை மனிதர்களுக்கு மரங்களின் தேவையை உணர்த்துகின்றன. மனிதன் உயிர் வாழ தேவையான "ஆக்ஸிஜன்" என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மகத்தான பணியை செய்வதும் மரங்களே!
மனிதகுலத்திற்கு மரங்கள் கொடுக்கும் பலன்கள் ஏராளம். அந்த வகையில் அதிசய மரம் ஒன்று சுவையான தண்ணீர் தருவதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
ஆம்! இந்த அதிசய மரத்தின் தாவர பெயர் "டெர்மினலியா டொமென்டோசா" (Terminalia Tomentosa). இதனை தமிழில் மருத மரத்தின் ஒரு வகையான மட்டி மரம் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த மரங்கள் தன் பெரிய தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. தண்டு பகுதியை லேசாக வெட்டினால் அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது.
பல சமயங்களில் காடுகளில் பயணம் மேற்கொள்பவர்களின் தாகத்தை இந்த மரங்கள் தீர்க்கின்றன. அரசு பூங்காக்கள், அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இது போன்ற மரங்களை பயிரிட்டால் நன்றாக இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மண்வளம் பாதுகாக்க, மழை பொழிய, இப்பூமி பாலைவனமாகாமல் தடுக்க, புவி வெப்பமயமாவதைத் தடுக்க வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது போய், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
வறட்சி, பஞ்சம் போன்றவை நிலவும் சூழலை வருங்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லாமல், பசுமையான மரங்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான சூழலை அவர்களுக்கு உருவாக்கி கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும். ஆகவே, மரங்களை காப்போம்!